Historie
வரலாற்றுப் பாதை………….1993 – 2015
1993ஆம் ஆண்டின் சித்திரை மாதம் ஆரம்பிக்கப்பட்டு இருபத்தியொராவது வருடங்களைப் பூர்த்தியாக்கி வெற்றியுடன் பெரு வளர்ச்சி கண்டுநிற்கும் பேர்லின் தமிழாலய வரலாற்றைச் சுருக்கமாக வெளிப்படுத்துவதில் பெருமகிழ்ச்சி கொள்கி;றோம். பேர்லினில் பல்வேறு தமிழ்பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டும் அவை நிரந்தரமாய் நின்று நிலைக்காமை பெரும் குறையானது. இந்நிலையில் பேர்லினில் நிரந்தரமாய் நின்றுநிலைக்கக்கூடிய ஓரு தமிழ்பாடசாலை உருவாக்கப்பட்டு அதில் எமது மொழி கலை, கலாச்சாரம்,பண்பாடு, தாய்நிலப்பற்று போன்றவற்றை ஊட்டி வளர்க்க வேண்டும் என்ற பரந்தநோக்கில் பேர்லின் வாழ் தமிழ்மொழிப்பற்றாளர்களும்,தமிழ்த்தேசிய செயற்பாட்டாளர்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்ட முயற்சியினால், 1993ஆம் ஆண்டு சித்திரை மாதம் 14ம் திகதி உலகத் தமிழர் இயக்கத்தின் கல்விப்பணியின் பொறுப்பாளர் திரு இரா. நாகலிங்கம் அவர்களினால் பேர்லின் தமிழாலயம் ஆரம்பிக்கப்பட்டு யேர்மனியில் உள்ள ஏனைய தமிழாலயங்களுடன் இணைந்துகொண்டது.
எமது தமிழாலயத்தின் ஆரம்ப கால நிர்வாகியாக திரு இ.பா.பாலச்சந்திரன் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர் தனது ஆளுமைத் திறனினாலும், அன்பினாலும் தனது நிர்வாகத்;தை நடாத்தி தமிழாலயத்தின் வளர்ச்சிக்கு தன்னலமற்ற சேவையைப்புரிந்தார். இதனைத்தொடர்ந்து எமது தமிழாலயத்தில் சிறிது காலம் போசகராகச் சிறந்த முறையில் பணியாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கவிடயமாகும். அவரைத் தொடர்ந்து நிர்வாகியாகச் செயற்பட்ட திரு யோகராசா.சிறிஸ்கந்தராஜா அவர்கள் தனது சினேகபூர்வ அணுகுமுறையினாலும், அயராத உழைப்பினாலும் தமிழாலயத்தின் வளர்ச்சிக்குப் பாடுபட்டார், இவரைத்தொடர்ந்து முறையே திருசெ.கந்தையா அவர்களும், திரு பா.பாலச்சந்திரன் அவர்களும் எமது தமிழாலயத்தின் நீண்ட கால நிர்வாகிகளாகச் செயலாற்றினார்கள். திரு செ.கந்தையா அவர்கள் தன் நிர்வாகத் திறமையினாலும், தனது அயரா உழைப்பாலும்,தனது நேரத்தையும்,சக்தியையும் முழுமையையாய் அர்ப்பணித்து தமிழாலயத்தின் நிண்ட கால வளர்ச்சிக்கு செயற்பட்டார் என்பது பேர்லின் வாழ் மக்களிடையே மறைக்க முடியாத யதார்த்தமாகும். அவரைத் தொடர்ந்து நிர்வாகியாகச் செயற்பட்ட திரு பாலசுப்பிரமணியம் பாலச்சந்திரன் அவர்கள் தனது நிர்வாகத்திறமையினாலும், அயரா உழைப்பினாலும், அர்ப்பணிப்பினாலும், ஆளுமையினாலும், தனது இறுக்கமான நிர்வாக கட்டமைப்பின் சிறந்த செயலாற்றலினாலும், எமது தமிழாலயத்தின் பரிணாம வளர்ச்சிக்கு பெரிதும் பாடுபட்டுச் செயலாற்றினார் என்பது இங்கு குறிப்பிடத் தக்கவிடயமாகும். தற்பொழுது எமது தமிழாலயத்தின் புதிய நிர்வாகியாகிய திரு றெக்சி இன்பக்குமார் பெனடிக்ற் அவர்கள் தனது ஆளுமைத் திறனினாலும், புரிந்துணர்வினாலும் மேலும் எமது தமிழாலயத்தை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வார் என்பதையே அவரது அறிவார்ந்த செயல் சுட்டிக்காட்டி நிற்கின்றது.
எமது தமிழாலயத்தின் ஆரம்பகாலத்தில் ஆண்டு 1 தொடக்கம் ஆண்டு 3 வரை 30 மாணவர்களுடனும், 4 ஆசிரியர்களுடனும் ஆரம்பித்த தமிழாலயத்தில் ஆசிரியை திருமதி ஜசிந்தா தம்பிப்பிள்ளை அவர்கள் பொறுப்பாசிரியையாகவும், அவருக்கு உதவி ஆசிரியர்களாக மூவரும் கடமையாற்றினார்கள். ஒரு சிறிய அறையினில் மிகச்சிரமமான சூழ்நிலையில் ஒற்றுமையாக இவர்கள் பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மழலையர்பிரிவிலிருந்து 12ம் ஆண்டுவரை விரிவடைந்து பெருவிருட்சமாக வளர்ச்சி அடைந்துள்ளது. எமது வளர்ச்சியடைந்த தமிழாலயத்தில் 12ம் ஆண்டு சித்தியடைந்த மாணவர்கள் ஆசிரியர்களாகவும், உதவி ஆசிரியர்களாகவும் பணியாற்றி வருகின்றார்கள், தமிழ்த்திறன்,பொதுத்தேர்வு,கலை,விளையாட்டு போன்ற பிரிவுகள் பிரிக்கப்பட்டு அதற்கான பொறுப்பாளர்களும் நியமிக்கப்பட்டு அவர்களின் அளப்பரிய சேவையினாலும் எமது தமிழாலயம் மிகப்பெரிய வளர்ச்சி கண்டுள்ளது. இதேபோன்று தமிழாலயத்திற்கு மாணவர் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு மாணவர்களின் ஒழுக்கத்தை கட்டிக்காப்பாற்றி வருகின்றார்கள்.
தமிழ்க் கல்விகழகத்தினால் நடாத்தப்பட்ட தமிழ்த்திறன்போட்டி, பொதுத்தேர்வு, விளையாட்டுப்போட்டி போன்றவற்றில் பங்குபற்றி எமது தமிழாலய மாணவர்கள் பல பரிசுகளைப் பெற்று எமது தமிழாலயத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார்கள்.
2002-2003ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வில் தமிழ், சமூகக்கல்வி ஆகிய பாடங்களில் யேர்மன் தழுவிய ரீதியில் 2வது இடத்தையும், 2005-2006ஆம் ஆண்டிற்கான பொதுத்தேர்வில் தமிழ்மொழியில் யேர்மன் தழுவிய ரீதியில் 1வது இடத்தையும் பெற்று யேர்மனியில் ஓர் முன்னணித் தமிழாலயமாக விளங்குகின்றது.
எமது தமிழாலயத்தில் அன்னைபூபதி,கிட்டு,திலிபன் என மூன்று இல்லங்களாகப் பிரிக்கப்பட்டு வெகு சிறப்பாக விளையாட்டுப்போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றது, இல்லப்போட்டிகளில் வெற்றிக் கிண்ணங்களைப் அள்ளிக்குவிக்கும் எமது தமிழாயலய மாணவர்கள், மாவீரர்வெற்றிக்கிண்ண விளையாட்டுப்போட்டிகளிலும் வெற்றிக் கிண்ணங்களைப் பெற்று எமது தமிழாலயத்திற்கு பெருமை தேடித்தந்துள்ளார்கள். இல்லப் போட்டிகளில் சுழற்சிமுறை சுற்றுக்கிண்ணம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இல்லங்களுக்கிடையிலான விளையாட்டுப்போட்டியில் முன்றுமுறை தொடர்ந்து முதலாவது இடத்தைப் பெற்றுக்கொள்ளும் இல்லமானது இக் கிண்ணத்தை தனக்கு சொந்தமாக்கிக் கொள்ளும் என்பதே விதியாகும் எமது தமிழாலயத்தின் ஆசிரியர்களான திருமதி சாந்தினி சிறிகாந்தன், செல்வி கதிஸ்யா கதிர்காமலிங்கம் ஆகியோர் முன்மாதிரி ஆசிரியர்களாக தமிழ்க் கல்விக் கழகத்தின் கல்விப் பிரிவின்கீழ் இணைக்கப் பட்டுள்ள ஏனைய தமிழாலயஆசிரியர்களுக்கு புலன்மொழிவளத்தேர்வு பற்றிய கருத்தரங்குகளைச் செய்து பயிற்சிஅளித்துள்ளார்கள்,
அண்மைக் காலமாக பல இளையோர்கள் தமிழ்க் கல்விக் கழகத்தின் நாடு சார்ந்த விடயத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டு மிகவும் திறமையாகச் செயற்பட்டு வருகின்றார்கள், அந்தவகையில் எமது தமிழாலயத்தின் இளம் ஆசிரியையான செல்வி கதிஸ்யா கதிர்காமலிங்கம் அவர்கள் தமிழ்க் கல்விக் கழகத்தின் பிரிவுகளில் ஒன்றான தமிழ்த்திறன்போட்டி துணைப்பொறுப்பாளராக தை மாதம் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் ஆவணி மாதம் 2013 வரை செயற்பட்டார் என்பது எமது தமிழாலயத்திற்கு பெருமை சேர்க்கும் விடயமாகும்.
எமது தமிழாலயத்தில் புலன்மொழிவளத்தேர்வு தொடர்பான கருத்தரங்கும், தமிழ்க் கல்விகழகத்தின் பொறுப்பாளராகிய திரு இராஜ.மனோகரன் அவர்களினால் தமிழ்த்திறன்போட்டிபற்றிய கருத்தரங்கும்,பேராசிரியர் திரு சண்முகதாஸ் அவர்களும், பேராசிரியர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்த வெளிநாட்டில் தமிழ்மொழியின் அவசியம் என்ற தலைப்பிலான கலந்துரையாடலிலும் கலந்துகொண்டு எமது தமிழாலயத்தின் பல ஆசிரியர்கள் சிறப்பு பயிற்சி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கவிடயமாகும்.
எமது தமிழாலயத்தின் முன்னைநாள் மாணவர்களினால்; முன்னைநாள் மாணவர் சங்கம் அமைக்கப்பட்டு பத்திரிகை ஒன்றும் வெளியிட்டுவைத்தார்கள், அத்தோடு கடந்த காலங்களில் எமது தமிழாலய விழாக்களும், தமிழ்த்திறன்போட்டிகளும், வெற்றிகரமாக நடைபெறுவதற்கு இவர்கள் ஆற்றிய செயற்பாடானது என்றும் எமது தமிழலயய வளர்ச்சிக்கு துணைநிற்பார்கள் என்பதையே சுட்டிக்காட்டி நிற்கின்றது. எமது தமிழாலயத்தின் முன்னைநாள் மாணவர்கள் யேர்மன்மொழியிலும் கல்விகற்று கல்விமான்களாக திகழ்கின்றார்கள் என்பதும் பெருமைக்குரியவிடயமாகும். எமது தமிழாலயத்தின் 15 வது ஆண்டுவிழாவிற்கு உலகத்தமிழர் இயக்கத் தலைவர் திரு பழ. நெடுமாறன் ஐயா அவர்கள் பிரதமவிருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்பித்தமையானது எமது தமிழாலயத்திற்கு பெருமை தேடித்தந்தது மாத்திரமல்லாது எமது தமிழாலயத்தின் வரலாற்றில் காலத்தால் அழியத காவியமாகத் திகழ்கின்றது.
2005 ஆம் ஆண்டில் தமிழீழ வடக்கு கிழக்கு மாகாணத்தில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட (கடற்கோள்) சுனாமி அலைகளின் கோரத்தாண்டவத்தினால் எமது மக்கள் சொல்லொணாத் துயருற்று நின்றவேளை எமது தமிழாலயத்தின் மாணவர்கள் வீதிவீதியாகச்சென்று துரிதகெதியில் செயற்பட்டு பெரும் நிதியைச் சேகரித்துக் கொடுத்து எமது மக்களின் துயர்துடைத்த நிகழ்வு மறக்கமுடியாத நினைவலைகளாகும்.
எமது தமிழாலயத்தின் துரித வளர்ச்சிக்கு கடந்தகாலங்களில் செயற்பட்ட நிர்வாகிகளின் கடமை உணர்வும், அயராத உழைப்பும் என்று கூறினால் மிகையாகாது. அதேபோன்று எமது ஆசிரியர்களின் தியாக சிந்தனையாலும், அயராத உழைப்பினாலும், பெருவளர்ச்சி கண்டுள்ளது, கலைநிகழ்ச்சிகள் தயாரித்துகொடுத்தல், தமிழ்த்திறன்போட்டிக்கு ஆக்கங்கள் தயாரித்து கொடுத்தல், விழாக்கள், விளையாட்டுப்போட்டிகளில் போதிய ஒத்துழைப்பு நல்குதல் விருந்தினர்களை உபசரித்தல் போன்ற விடயங்களில் பெற்றோர்பிரதிநிதியினதும்;,பெற்றோர்களது ஒத்துழைப்பினாலும், மாணவர்களின் ஊக்கத்தினாலும் எமது பேர்லின் தமிழாலயம் பரிணாம வளர்ச்சி அடைந்து புகழ்பரப்பி நிலைத்து நிற்கின்றது என்பது யாவரும் அறிந்த விடயமாகும். இதனையே தமிழ்க் கல்விக் கழகத்தின் முன்னைநாள் பொறுப்பாளர் திரு இரா.நாகலிங்கம் ஐயா அவர்களும், தமிழ்க் கல்விக கழகத்தின் பொறுப்பாளர் திரு செ. லோகானந்தம் அவர்களும், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன் ஐயா அவர்களும் உறுதி செய்துள்ளார்கள் என்பது சாலச்சிறந்த விடயமாகும்.
மற்றும் எமது தமிழாலயத்தின் வளர்ச்சிக்காக சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கிய சகல மக்களுக்கும் எமது நன்றியைத் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகின்றோம்.
நன்றி
நிர்வாகம்