நால் புறமும் நம் சொந்தம் புடைசூழ யேர்மன் தலைநகரில் நடைபெற்ற பொங்கல்விழா

தைப்பொங்கல் என்பது தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஒரு தனிப்பெரும் விழா. தமிழர் திருநாளாக தமிழர்களால் தமிழ்நாடு, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஐரோப்பிய நாடுகள், வட அமெரிக்கா, தென் ஆப்பிரிக்கா, மொரிசியசு என தமிழர் வாழும் அனைத்து நாடுகளிலும் கொண்டாடப்படுகிறது.
ஒரு இனம் தன்னை அடையாளப் படுத்திக்கொள்ள வேண்டும் என்றால் அந்த இனம் தனது மொழி, தனது பண்பாடு, தனது நாகரீகம் போன்றவற்றை பேணிக்கொள்ளுதல் அவசியமாகின்றது. இந்த காப்பாற்றும் தன்மையே அந்த இனத்தின் தொடக்கத்தையும் வாழ்வாதாரத்தின் முதன்மையையும் அறிமுகம் செய்து வைக்கும் காரணியாகின்றது.
அந்தவகையில் புலத்தில் வாழ்ந்தாலும் நிலத்தின் மண்வாசத்தை மறந்திடாமல் பேர்லின் தமிழாலயம் தமிழர் திருநாளை மஞ்சள் தோரணங்களுடன் மாவிலையும் சேர்த்து கட்டி
நால் புறமும் நம் சொந்தம் புடைசூழ , பறையிசை தமிழ் என்று விண்ணதிர முழங்க, புதுப்பானையில் பொங்கல் பொங்கி , கரும்பு உண்டு மிகவும் சிறப்பாக கொண்டாடியது.
தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் மண்டபம் நிறைந்த மக்களின் கரகோசத்துடன் அரங்கேறியது. 2018/2019 பொதுத்தேர்வில் சிறந்த புள்ளிகளை பெற்றுக்கொண்ட மாணவர்களுக்கு கேடையங்கள் வழங்கி பாராட்டப்பட்டனர்.
பெற்றோர்களின் அளப்பெரிய உபசரிப்பும் பராமரிப்பும் அனைத்து மக்களின் மனங்களில் ஆனந்தமாய் பதிந்தது.
பொங்கல் விழா என்பது தமிழர்களின் தேசிய விழா. தனித்துவமான மொழியைப் பேசுகின்ற தனித்துவமான பண்பாட்டைக் கொண்டுள்ள தனித்துவமான கலைகளைக் கொண்டுள்ள தமக்கென பாரம்பரிய மண்ணைக் கொண்டுள்ள மக்கள் ஒரு தேசிய இனத்தவர் ஆவார்கள். அவர்களுக்குச் சுயநிர்ணய உரிமைக் கோட்பாடு உரித்தானதாகும் என்று உலகச்சட்டம் வரையறை செய்கின்றது .
இதை கவனத்திலெடுத்த ஈழத்தமிழர்கள் தமிழர் திருநாளை தமது புத்தாண்டுத் தினமாகவும் இருளகன்று இழந்த நிலப்பரப்புக்கள் மீட்கப்பட்டு எமது இனம் நிமிர்வு பெறுவதற்கான விடுதலை ஆண்டாய் மலரவேண்டும் என்றும் பிரகடனப்படுத்திக் கொண்டனர்.
தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது தமிழர் நம்பிக்கை. புத்தாண்டில் உலகம் வாழ் தமிழர்களின் வாழ்வில் தென்றல் வீசட்டும். இன்பம் சேரட்டும். மகிழ்ச்சி பொங்கட்டும்.
தமிழாலயம் பேர்லின்
நிர்வாகம்